அநந்தாழ்வான் !

May 25, 2017

அநந்தாழ்வான் !

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை !

அவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர்
(பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்)

ஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

பரமபதம் அடைந்த இடம் : திருவேங்கடம்

எழுதிய கிரந்தங்கள் :
வேங்கடேச இதிகாச மாலை,
கோதா சது:ச்லோகி,
ராமானுஜ சது:ச்லோகி

அநந்தாழ்வான் :
அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் ! எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு எச்சான்,
தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார். எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில்
தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து
அவருடைய நிழலில் இருக்க ஆசை பட்டார். அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு
அவரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார்.
எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும்
அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார்.
அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர்.
அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும்
எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே
ஆச்ரயித்து இருக்க வேணுமென்று அருளாளப் பெருமாள்
எம்பெருமானார் கேட்டுக்கொண்டார்.
திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு
அநந்தாழ்வான் என்றே பெயர் !
அநந்தாழ்வானுக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள சில ஒற்றுமைகள்:

இருவருக்கும் ஒரே திருநக்ஷத்ரம் …! சித்திரை – சித்திரை !
இருவருமே முழுவதுமாக ஆசார்ய நிஷ்டையில் திளைத்தவர்கள். மதுரகவியாழ்வார் , நம்மாழ்வார் திருவடிகளிலும்
அநந்தாழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளிலும்
ஆச்ரயித்து இருந்தனர்.
எம்பெருமானார் திருவாய்மொழியின் தேனான பாசுரங்களுக்கு வ்யாக்யானம் சாதித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள்,
“ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் (3.3)
நம்மாழ்வார் திருவேங்கடமுடையானுக்குத் தன்னுடைய
நீண்ட நாள் ஆசையான உயர்ந்த கைங்கர்யங்களை செய்ய வேணுமென்று வெளிப்படுத்தியிருந்தார்.
அப்பதிகத்தில் திருவேங்கடமுடையான் உயர்ந்த புதிய புஷ்பங்களில்
ஆசை உடையவராக இருந்ததைக் கூறியிருந்தார்.
இதை மனதில் கொண்டு எம்பெருமானார் அங்கிருந்தோரைப் பார்த்து யாரேனும் திருமலைக்குச் சென்று அழகிய நந்தவனம் அமைத்து
ஆழ்வார் விரும்பிய அந்த புஷ்ப கைங்கர்யத்தை செய்ய விருப்பம் உள்ளதா எனக் கேட்க அநந்தாழ்வான் உடனே எழுந்திருந்து
ஆழ்வார் மற்றும் எம்பெருமானாரின் அந்த திருவுள்ளத்தைத்
தாம் பூர்த்தி செய்வதாகக் கூறினார். அது கேட்டு எம்பெருமானார் சந்தோஷப்பட , உடனே அநந்தாழ்வான் திருமலைக்கு விடை பெற்றுச் சென்றார். அவர் முதலில் திருவேங்கடமுடையனுக்கு மங்களாசாசனம் செய்து புதிய நந்தவனம் அமைத்து அதற்கு “ராமானுஜன்” என்று பெயரிட்டு திருவேங்கடமுடையனுக்கு தினமும் புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார். இது கேட்டு எம்பெருமானார் அதைக் காண விருப்பம் கொண்டு
தம்முடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தை விரைவாக முடித்துக் கொண்டு திருமலைக்குப் பயணப்பட்டார்.

வழியில் காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் மங்களாசாஸனம் செய்துவிட்டு திருப்பதி வந்தடைந்தார்.
அநந்தாழ்வானும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானாரை
எதிர் கொண்டழைக்க மலை அடிவாரத்திற்குச் சென்றனர்.
ஆனால் எம்பெருமானார் திருமலையே ஆதிசேஷனின் அம்சம் எனக் கூறி அதன் மேலேற மறுத்துவிட்டார். பின் அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் “தேவரீரே மறுத்துவிட்டால் நாங்கள் எவ்வாறு ஏறுவோம்”
என்று மிகத் தாழ்மையுடன் வினவ அவரும் அதை ஆமோத்தித்துப் பின்
மலை மேல் ஏறினார். திருமலை வந்தடைந்தவுடன் திருமலை நம்பியே வந்து எம்பெருமானாரை வரவேற்று அழைத்துச் சென்றார். ஸ்வாமி பின் திருமலையில் அநந்தாழ்வானால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த “ராமானுஜன்” நந்தவனத்தை பார்த்து அங்கு நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பலவித வண்ண மலர்களைப் பார்த்து பேருவகை கொண்டார்.
திருமங்கை ஆழ்வார் கூறியது போல
“வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (பரகால நாயகி ஒரு கிளி வளர்த்தாள். அது சதா சர்வ காலமும் எம்பெருமானின் திருநாமத்தையும்/சரிதத்தையும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்ததால் பரகால நாயகி அக்கிளியை “வளர்த்ததால் பயன் பெற்றேன்” என்று பேரானந்தம் கொண்டாள்). அவ்வாறே எம்பெருமானாரும் அநந்தாழ்வானின் அர்ப்பணிப்பைப் பார்த்து பேருவகை கொண்டார்.

ஒரு சமயம் அநந்தாழ்வானும் அவரது கர்ப்பிணி மனைவியும் நந்தவனத்திற்காக. ஒரு சிறிய குளம் வெட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது எம்பெருமானே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தான். ஆனால் தன்னுடைய ஆசார்யனின் கட்டளையை தானே நிறைவேற்ற எண்ணிய அநந்தாழ்வான் அச்சிறுவனின் உதவியை மறுத்து விட்டார். ஆனால் அநந்தாழ்வான் இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி அச்சிறுவனின்உதவியைப் பெற்றுக் கொண்டாள். இதைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மிகுந்த கோபம் கொண்டு அச்சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார். இறுதியில் தாம் வைத்திருந்த கடப்பாரையை அவன் மீது எறிந்தார். அக்கடப்பாரை அச்சிறுவனின் நாடியில் பட அவனும் ஓடி சன்னதிக்குள் மறைந்தான்.
திருவேங்கடமுடையானின் முகவாயிலும் அடி பட்டதாகக் காட்சியளிக்க, அதற்காகத்தான் நம்ம இன்றளவும்
திருவேங்கடமுடையனுக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி
குளிரப் பண்ணுகிறோம்.

ananthazhwan-snake

ஒரு முறை அநந்தாழ்வானை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது.
அப்போது உடனிருந்தவர்கள் மிகுந்த கவலை அடைய அவர் கூறினார். “என்னைத் தீண்டிய சர்ப்பம் பலமுடையதாக இருந்தால்
நான் இந்த சரீரத்தை வ்ரஜை நதியில் நீராடித் தொலைத்து விட்டுப் பின் பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வேன்.
மாறாக இருந்தால் இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி
திருவேங்கடத்திலேயே கைங்கர்யங்கள் செய்வேன்” என்றார்.
அவர் கைங்கர்யத்தில் அவ்வளவு ஊற்றம் உடையவராக விளங்கினார். தன்னுடைய தேஹ அபிமானமே இல்லாதிருந்தார்.

ananthazhwn-ants

மற்றறொரு முறை அவர் பக்கத்தில் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவேங்கடத்திலிருந்து அவர் பிரசாதங்கள் கொண்டு வந்திருந்தார். அவற்றைப் பிரித்த போது அதில் பல எறும்புகள் இருப்பதைப் பார்த்துத் தன்னுடைய சிஷ்யர்களைப் பார்த்து அவற்றை மீண்டும் மலையிலே கொண்டு விட பணித்தார். ஏனென்றால் குலசேகர ஆழவார் கூறியது போல் (அவரும் எம்பெருமானின் பக்தர்களும் ) அவர் மலையில் ஏதேனுமாக இருக்க ஆசைப் பட்டாரே. அதனால் இந்த எறும்புகள் அவர்களாக இருக்கக் கூடும். எனவே நாம் அவர்கள் திருவேங்கடத்தில் வாழ்வதற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.

ஒரு முறை அநந்தாழவான் திருவேங்கடமுடையானுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை உடனே அழைத்து வரும்படி ஒருவரை திருவேங்கடமுடையான் பணித்தார். ஆனால் அநந்தாழ்வான் தான் தொடுத்துக் கொண்டிருந்த மாலை கைங்கர்யம் முடிந்த பின் தாமதமாகத் திருவேங்கடமுடையானிடம் சென்றார். அவருடைய கால தாமதத்திற்குக் காரணம் கேட்க அதற்கு அவர், தமக்கு புஷ்பங்கள் எல்லாம் மொட்டாக மலரும் தருவாயில் இருக்கும்போதே மாலை கட்டி முடித்துவிடவேண்டும் என்றும் மேலும் சந்நிதியில் அவருக்கான கைங்கர்யங்கள் ஏதுமில்லை என்பதால் எம்பெருமானாரால் கட்டளையிடப்பட்ட “கைங்கர்யத்தைத் தவிர வேறு கார்யம் இல்லை” என்று பதிலுரைத்தார். அதற்கு எம்பெருமான் “நான் உம்மை திருமலையிலிருந்தே வெளியேற வேண்டும் எனப் பணித்தால் என்ன செய்வீர்?” என்று வினவ அதற்கு அவர், “நீர் எனக்குச் சில காலம் முன்பாக இங்கு வந்தீர். ஆனால் நான் எம் ஆசார்யன் கட்டளையாலே இங்கு வந்து சேர்ந்தேன்.; அவ்வாறிருக்க நீர் எப்படி எம்மை வெளியேறச் சொல்ல முடியும்” என்று கேட்டார். அது கேட்ட எம்பெருமான், அநந்தாழ்வானின் மிக சிறந்த ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்.

அநந்தாழ்வானின் பெருமைகளையும் அறிவுரைகளையும் வ்யாக்யானங்களில் கூறிய படி சிலவற்றை இங்கே காண்போம் !

பெரியாழ்வார் திருமொழி 4.4.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீவைஷ்ணவர்கள்
ஆசார்யனுக்கு உகப்பான வார்த்தைகளைத் தவிர வேறெந்த வார்த்தைகளையும் பேச மாட்டார்கள் என்று ஆழ்வார் புகழ்கிறார்.
பட்டர் மேல் அநந்தாழ்வானுக்கு இருந்த பற்றுதலை
(பட்டர் அநந்தாழ்வாழ்வானை விட வயதில் சிறியவராக இருந்தாலும்) மாமுனிகள் வெளிப்படுத்துகிறார். அநந்தாழ்வானுடைய அந்திமக் காலத்தில் அவர் சில ஸ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து
பட்டருக்கு மிகவும் நெருக்கமான/பிடித்தமான பெயர் என்று கேட்க
அதற்கு அவர்கள் பட்டருக்கு மிகவும் பிடித்தமான நம்பெருமாள் பெயரான “அழகிய மணவாளன்” என்று பதில் கூறினர். அதற்கு அநந்தாழ்வான் ஒரு கணவனுடைய பெயரைச் சொல்லுவது நம் சம்பிரயதயத்திற்கு எதிரானது என்றாலும் பட்டருக்கு உகப்பானது என்பதால் தாமும் அந்தப் பெயரையே சொல்வதாகவும் கூறி அந்தத் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பரமபதம் அடைந்தார். அவருக்கு எம்பெருமானாரின் பெயரையே சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பட்டருக்குப் பிடித்தமான பெயர்
அழகிய மணவாளன் என்பதால் அதையே தாமும் கூறினார்.

நாச்சியார் திருமொழி 7 .2 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்: –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பாஞ்சஜன்யம் ஸமுத்ரத்தில் பிறந்தாலும் முடிவில் எம்பெருமானின் திவ்ய திருக்கரங்களில் சென்றடைந்தது.
இதைப் பற்றி விளக்கும்போது பெரியவாச்சான் பிள்ளை,
அநந்தாழ்வான் மற்றும் நஞ்சீயர் தொடர்பான விஷயத்தைக் கூறுகிறார். பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்ட ஒரு வேதாந்தி
தம்முடைய செல்வத்தையெல்லாம் மூன்று பங்காகப் பிரித்து
இரண்டு பகுதிகளைத் தன்னுடைய இரண்டு மனைவிகளுக்கும்
கொடுத்து விட்டு மூன்றாவது பங்கைத் தமது ஆசார்யரான பட்டரிடம் ஸமர்ப்பித்துவிட்டுத் தாம் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டு
தம்முடைய ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய விரும்பி ஸ்ரீரங்கம் வந்தார். இதைக் கேள்விப்பட்ட அநந்தாழ்வானும் அந்த வேதாந்தியிடம்
“நீர் கிருஹஸ்தாச்ரமத்தில் நல்லபடியாக சௌகர்யமாகத் தானே
இருந்து வந்தீர். நீர் அங்கேயே தொடர்ந்து இருந்துகொண்டு ஸம்பரதாய விஷயத்தை நன்றாக அறிந்துகொண்டு ஆசார்யனுக்கும் பாகவதர்களுக்கும் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்து பின்பு அப்படியே பரமபதம் அடைந்திருக்கலாமே. ஏன் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டீர்?” என்றார்.
வேறு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதற்கு “என்ன செய்ய” என்று கேட்க அநந்தாழ்வானும் “ஒருவர் திருமந்திரத்திலே
(பரமாத்மா ஜீவாத்மா சம்பந்தத்தை அறிந்து கொண்டு)
பின் த்வய மஹா மந்த்ரத்தாலே வளர்ந்து
(பரமாத்மாவே உபாயம் உபேயம் என்று அறிந்து கொண்டு)
அதற்குத் தகுந்தாற் போல் வாழ வேண்டும்” என்று அருளினார்.

நாச்சியார் திருமொழி 12.5 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் எவ்வாறு எல்லா கோபர்களும் கோபிகளும் கண்ணன் எம்பெருமான் காளியன் தலையில் மேல் நின்று நடனம் ஆடுவதைக் கேட்டு மூர்ச்சித்து விழுந்தார்கள் என்று விளக்குகிறாள்.
ஒரு முறை அநந்தாழ்வான் நம்பி குஹ தாசர் என்பவருடன் எம்பெருமானாரை தரிசிக்க சென்றார். அவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அடைந்த பொது வழியில் சில ஏகாங்கிகள் (கைங்கர்யபரர்கள்) மழித்த தலையோடு காவேரியிலிருந்து நீராடிவிட்டு வருவதைப் பார்த்துக் காரணம் வினவ அவர்கள் எம்பெருமானார் இந்த பூவுலகை நீத்து பரமபதம் அடைந்ததைச் சொன்னார்கள். இதைக் கேட்ட உடனேயே நம்பி குஹ தாசர்
அருகிலிருந்த மரத்தின் மேலேறி தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார். அதற்கு அநந்தாழ்வான் ” நீர் எம்பெருமானார் பரமபதம் அடைந்த செய்தி கேள்விப்பட்ட அந்த க்ஷணமே உயிரை விட்டிருக்க வேண்டும். இப்போது மரத்தில் மீதிருந்து குதிப்பதால் உங்கள் உயிர் போகாது. ஆனால் உம்முடைய கால்கள் தான் உடைந்து போகும் என்றார்”. இந்த நிகழ்வு கோப கோபிகளுக்கு கிருஷ்ணன் மீதிருந்த பற்றுதலை அழகாக விளக்குகிறது.

பெருமாள் திருமொழி 4.10 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் தாம் ஏதேனுமாக வேண்டும் என்று கூறுவதன் மூலம் திருவேங்கடத்தின் மீது தாம் கொண்டிருந்த பற்றுதலைக் கூறினார். அது போல அநந்தாழ்வானும் திருவேங்கட மலைக்கும் தமக்கும் ஏதேனும் ஒரு சம்பந்தம் இருக்க வேணும் என்பதற்காக திருவேங்கடமுடையனாகவே ஆனாலும் பரவாயில்லை என்கிறார்.

பெரிய திருமொழி 5.5.1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி பாவத்தில் திருவேங்கடத்தைப் பார்த்து “வேங்கடமே வேங்கடமே” என்று கதறி அந்த திவ்ய தேசத்தின் மேல் தாம் கொண்டு இருந்த அளவில்லாப் பற்றுதலைக் கூறுகிறார்.
இதை நஞ்சீயர், பட்டர் எவ்வாறு நம்பெருமாளை
“அழகிய மணவாளா” என்று கூப்பிட்டாரோ,
அநந்தாழ்வான் எவ்வாறு ஸ்ரீனிவாசனை “திருவேங்கடமுடையான்”
என்று கூப்பிட்டாரோ அதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

திருவாய்மொழி 6.7.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் , நம்மாழ்வாருக்கு வைத்தமாநிதி
எம்பெருமானிடத்திலும் திருக்கோளூர் திவ்ய தேசத்தின் மேலும் இருந்த அதீத பற்றுதலைக் கூறுகிறார். நம்பிள்ளை இதை அநந்தாழ்வானின் ஒரு நிகழ்வின் மூலம் விளக்குகிறார்.
அதாவது ஒருவன் அவனுடைய சொந்த ஊரான
திவ்ய தேசத்தில் இருந்து கொண்டே அந்தப் பெருமாளுக்கு
கைங்கர்யம் செய்வதே சிறந்தது என்பதைக் குறிப்பிடுகிறார்.
ஒருமுறை அநந்தாழ்வான் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சோழ குலாந்தகன் என்ற ஊரில் ஒரு வயலில் உழவு வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க
அவரும் தாம் திருக்கோளுரைச் சேர்ந்தவன் என்று கூற
பின் ஏன் நீர் உமது சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வந்தீர் எனக் கேட்டார். அதற்கு அவர் தமது சொந்த ஊரில் அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்றும் அதனால் இங்கு வந்ததாகவும் சொன்னார்.
அது கேட்ட அநந்தாழ்வான் நீர் உமது சொந்த ஊரில்
சில கழுதைகளை மேய்த்தாவது சம்பாதித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
அது திருக்கோளூர் எம்பெருமானுக்கும் நம்மாழ்வாருக்கும் மிகவும் உகப்பாக இருந்திருக்கும் .இங்கு வந்து வயலில் வேலை செய்வதற்குப் பதில் அங்கேயே இருந்து கொண்டு அவர்களுக்குக் கைங்கர்யங்கள் செய்து கொண்டு இருந்திருக்கலாம் என்றார்.
இதன் மூலம் இந்த உலகில் வாழும் ஜீவாத்மாக்கள்
ஒரு திவ்ய தேசத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார்.

திருவாய்மொழி 6.8.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில்
நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் பிரிவாற்றாமையால்
தாம் படும் வேதனையை எம்பெருமானிடத்தில் சென்று கூற
ஒரு பறவையைத் தூது விடுகிறார். அப்போது ஆழ்வார் அந்தப் பறவையிடம் அது தமக்கு தூதாகச் சென்றால் அதற்கு அவள் இந்த ஸம்ஸாரம் என்கிற லீலா விபூதியையும் பரமபதம் ஆகிய நித்ய விபூதியையும் இரண்டையுமே அளிப்பதாகக் கூறுகிறாள். (பராங்குச நாயகியே எம்பெருமானின் நாயகியாகவும்/மனைவியாகவும் இருப்பதால் எம்பெருமானுக்குச் சொந்தமான எல்லாமே அவளுக்கும் சொந்தம்) .
அப்போது ஒருவர் பராங்குச நாயகி பின் எங்கே தங்குவாள் எனக் கேட்க அதற்கு அநந்தாழ்வான் அந்த பறவை எங்கே இடம் கொடுக்கிறதோ
அங்கே இருப்பாள் என்று மிக அழகாகச் சொல்கிறார்.

திருவாய்மொழி 7.2.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆழ்வார்,
எம்பெருமானைப் பார்த்து “என் திருமகள் சேர் மார்பன்” என்று சொல்கிறார். அதாவது அவரே மஹாலக்ஷ்மித் தாயாரின் உறைவிடம் என்பதால். ஆழ்வாரின் மேல் இருந்த மிகுந்த பற்றுதலால் அநந்தாழ்வான்
தன்னுடைய பெண்ணிற்கு “என் திருமகள்” என்று பெயரிட்டார்.

வார்த்தமாலை 345 –
ஒரு முறை பட்டர் தனது சிஷ்யர்களுள் ஒருவரை அநந்தாழ்வானிடம் சென்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வரச் சொன்னார். அவரும் அநந்தாழ்வானின் திருமாளிகைக்குச் சென்ற போது அங்கே ததீயாராதனம் நடந்து கொண்டிருந்தது.
அங்கு இடம் முழுவதும் நிரம்பி இருந்ததால் அந்த சிஷ்யர்
அங்கே எல்லோரும் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தார்.
அவரைப் பார்த்து விட்ட அநந்தாழ்வான் அவரை வரவேற்று இறுதியில் தம்மோடு இருந்து பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டினார்.
பின் அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது
அந்த ஸ்ரீ வைஷ்ணவர் தாம் பட்டருடைய சிஷ்யர் என்றும்,
பட்டர் தான் அவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்று அநந்தாழ்வானிடமிருந்து அறிந்து கொண்டு வரச் சொன்னதையும் கூறினார். அதற்கு அநந்தாழ்வான் கூறினார்,
ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் கொக்கு போலவும்,
கோழி போலவும் உப்பைப் போலவும் உம்மைப் போலவும் இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.
கொக்கு என்பது எப்போதும் மிகச் சிறந்த மீனுக்காக காத்திருந்து உண்ணும். அது போல ஸ்ரீவைஷ்ணவனும் பகவானையே எப்போதும் எல்லாவற்றிற்கும் அண்டி இருந்து பாகவத கைங்கர்யத்தையே மிகச் சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கோழி எப்போதும் குப்பையைக் கிளறி அதிலிருந்து தனக்குத் தேவையான அரிசியை பொறுக்கிக் கொள்ளும். அது போல ஸ்ரீவைஷ்ணவனும் சாஸ்த்ரங்களிலிருந்து தேடி (அதில் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் கிடைக்கும்) அதிலிருந்து மிக உயர்ந்த விஷயங்களான பரகத ஸ்விகாரம் பாகவத கைங்கர்யம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு அவற்றைப் பின் பற்றி நடக்க வேண்டும்.
உப்பு நம் உணவுப் பண்டங்களோடு கலந்து அந்த உணவை சுவையானதாக ஆக்கும். அதுபோல ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் தன்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடக்கி இன்னொரு ஸ்ரீவைஷ்ணவன் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மேலும் தான் இல்லாதபோது தான் செய்த நல்ல செயல்களை மற்றவர்கள் எண்ணிப் பார்க்குமாறு இருக்க வேண்டும்.
இறுதியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் உம்மைப் போன்று பொறுமை காத்து பணிவோடு இருந்து என்னிடமிருந்து விஷயங்களை அறிந்து கொண்டது போல ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அடுத்தவர்களின் சந்தோஷத்திற்காக பணிவுடன் செயல் பட வேண்டும் என்றார்.

ananthazwan-magilatree
இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும்
அவருடைய திருநக்ஷத்ரமான சித்திரை- சித்திரையிலும்
அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும்
அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி
தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும்
அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

ananthazhwan-thirumalai
இதுவரை நாம் அநந்தாழ்வானின் சில பெருமைகளைப் பார்த்தோம்.
அவர் முழுவதுமாக தான் வாழ்வை பாகவத நிஷ்டையிலேயே கழித்தார். எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கினார்.
நாமும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து
அவருடைய பாகவத நிஷ்டையைப் போல்
ஒரு துளி அளவாவது பெற ப்ரார்த்திப்போம்.

அநந்தாழ்வானுடைய தனியன்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/03/31/ananthazhwan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

sarathyt | 1:22 முப இல் மே 25, 2017 |
Categories: Other AchAryas | URL: http://wp.me/p3SQGi-eO
Change your email settings at Manage Subscriptions.

Trouble clicking? Copy and paste this URL into your browser:
https://guruparamparaitamil.wordpress.com/2017/05/25/ananthazhwan/
Thanks for flying with WordPress.com

Is India safe–What is Ford Foundation

March 7, 2014

Is India safe–What is Ford Foundation.

Hello world!

January 13, 2010

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!